Friday, January 23, 2015

பார்வை ஒன்றே போதுமா?

பார்வை ஒன்றே போதுமா?

சிறுகதை: பார்வை ஒன்றே போதுமா?

மாற்றுத் தலைப்பு:
பார்வை ஒன்று, அர்த்தம் வேறு
பார்வைகள் பலவிதம்
விபத்தில் வந்த விபரீதம் 

________________________________________________________________--
அவன் வயது சுமார் 40 இருக்கலாம்.

அன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் வயதான தாயுடன் வெளியூர் புறப்பட்டான். அவன் தாய்தான் அவனுக்கு எல்லாம். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. உறவு என்று சொல்லிக்கொள்ளவும் யாரும் அவர்களுக்குக் கிடையாது. ஏன் அப்படி? அதைச் சொல்லப் போனால் அது ஒரு தனி ஃப்ளாஷ்பேக் ஆகிவிடும்.

சில பல வருடங்களாகவே அவன் அதிகம் எங்கும் வெளியே சென்றதில்லை. அன்று அதிசயமாக ஒரு தூரத்து உறவினர் (அம்மா வழியில்) இறந்த தகவல் அறிந்து அவன் தாய் கிராமத்திற்குச் செல்ல இருந்தார். சாதாரணமாக அவனை வெளியே அனுப்புவதில்லை. அவனாகச் சென்றால் அக்கம் பக்கம் யார் கூடயாவது கடைக்குப் போய் வருவான், இல்லாவிடில் வீட்டிலேயே டிவி கேட்டுக்கொண்டோ ரேடியோவில் வரும் நிகழ்வுகளைக் கேட்டுக்கொண்டோ இருந்துவிடுவான். அவன் அம்மா காலையில் அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்துவிட்டு  6 மணிக்கு வேலைக்குப் போனால் சாயந்தரம் 6 மணிக்கு மேல்தான் பொழுதுபோய்த்தான் திரும்ப வருவாள். அதுவரை அடுத்த வீட்டு மீனா அக்காதான் அவனுக்கு எல்லாம்.

அன்று வழக்கத்திற்கு மாறாய் ரயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. இருப்பினும் அவன் தாய் ரயில்வே போர்ட்டர் ஒருவர் உதவியுடன் தன் அவசரப் பயணத்தின் நோக்கத்தை விளக்கி பொதுக் கோச்சில் உட்கார இடம் பிடித்துவிட்டார்.

ரயில் புறப்பட்டது. அம்மா, நாம எப்பம்மா ஊருக்குப் போவோம்?

அம்மா சொன்னாள்: நாளைக்கு காலையில் 5 மணிக்கெல்லாம் மாயவரம் போய் விடுவோம். அங்கேருந்து ரெண்டு மணி நேரம் பஸ்ல போகணும், அப்பறமா நம்ம ஊர் வந்துடும்டா கண்ணா!!

அவன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே வந்தான். ரயில் பாதையை ஒட்டிய சாலையில் ரயில் செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் ஏதோ ஒரு வாகனம் சென்றது. நிறைய மனிதர்களும் மூட்டை முடிச்சுக்களும் அதன் மேல் இருந்தன.

அவனுக்கு ஒன்றும் புரியலை. ஏன்மா, அந்த ட்ராக்டர் மேலே நிறைய வச்சிருக்காங்களே, அதெல்லாம் என்னம்மா? ஏம்மா நிறையப் பேர் உக்காராம தொங்கிண்டே இருக்காங்களே, ஏம்மா?

இல்லடா கண்ணா, அது ட்ராக்டர் இல்லை, அது பஸ். அதுல உள்ள இடம் உட்காரக் கெடைக்கலையோன்னோ, அதான் சில பேர் தொங்கிண்டு இருக்கா?
மேலே வச்சிருக்கறதெல்லாம் லக்கேஜ். சில பேர் தங்களோட சாமான்கள் எல்லாம் பெரிசு பெரிசா கொண்டு வந்திருப்பா, அது பஸ்ஸுக்குள்ள வைக்க முடியாதோன்னோ அதான் மேலே வச்சிருக்கா.

ரயில் செல்லச் செல்ல அவன் ரெண்டு பக்கமும் மாற்றி மாற்றி ரசித்துக்கொண்டே வந்தான். அவன் வாழ்க்கையில் அதிகம் ரயில் பயணமோ பேருந்துப் பயணமோ சென்றதில்லை. அதனால் அவனுக்கு எல்லாமே புதிதாய் இருந்தது.

அம்மா, அது என்னம்மா, பெரிசு பெரிசா நிறைய இருக்கே அது மேலே (அவன் காட்டியது சாலை ஓரம் இருந்த வரிசையான புளிய மரங்களை). அவனுக்கு அதை அடையாளப்படுத்தத் தெரியலை.

அதுவாடா கண்ணா, அது புளிய மரம். அப்படித்தான் ரெண்டு பக்கமும் நிறையா இது மாதிரி இருக்கும்.

ஐ, புளிய மரமா? மீனாக்கா எனக்கு புளியங்காய் சாப்பிடக் கொடுத்திருக்கா? புளிப்பா இருக்குமே?

ஆமாம்டா செல்லம். நம்ம ஊருக்குப் போனதும் நம்ம ஊர்க்காரங்ககிட்டச் சொல்லி உன்னை அது மாதிரி நெறைய மரமெல்லாம் செடியெல்லாம் காட்டச் சொல்றேன், என்ன?

சரிம்மா.

மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டே வந்ததில் அவனுக்கு அயர்ச்சியாய் இருந்ததோ என்னமோ அப்படியே உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டான்.

தூங்கி விழித்ததும் பார்த்தான், அவன் அம்மாவைக் காணலை. பக்கத்தில் யார் யாரோ இருந்தார்கள். அவன் இங்கும் அங்கும் போய்ப் பார்த்ததில் ஒரு பெரியவர் என்னப்பா, யாரைத் தேடறே? என்றார்.

அம்மா!! அம்மா!! என்று ஒரு மாதிரி திகைப்புடன் சொன்னான்.

இங்கேதான் எங்கேயாவது இருப்பா, நல்லாத் தேடிப் பாருப்பா?

சுற்றி முற்றிலும் பார்த்தும் அவனுக்கு ஒண்ணுமே புரியலை. எப்படியோ தான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்துவிட்டான். ரயில் ஏதோ ஸ்டேஷனில் நின்றது.

அவனுக்கு ஸ்டேஷனைப் பார்த்ததும் அங்கு வரும் மக்கள் அங்கும் இங்கும் அலைவதும், 'காப்பி, காப்பி'  'டீ, டீ' 'இட்லி, காப்பி வடை' என்று குரல்களும் அவனுக்கு அதிசயமாய் இருந்தன.

அம்மா சொன்னாளே, சாப்பிட ஏதாவது தரேன்னு? நாமதான் தூங்கிட்டோமோ? என்று யோசித்தபோதே அம்மா வந்துவிட்டாள்.

எங்கம்மா போனே?

இங்கதான்டா கண்ணா, பாத்ரூம் வரைக்கும் போயிருந்தேன். என்னா, இட்லியும் மோர்சாதமும் கொண்டுவந்திருக்கேன், சாப்பிடறயா?

என்னம்மா? இன்னைக்கும் மோர் சாதமா? இட்லிதான் இருக்கா? வேற ஒண்ணும் இல்லையா?

வேற என்ன வேணும் உனக்கு? நான் தான் சொல்லித்தானே அழைச்சுண்டு வந்தேன். அதைக்கொண்டா, இதைக்கொண்டான்னு கேக்கப்படாதுன்னு?

பசிக்குதும்மா, தோசை வடைங்கறாளே அதெல்லாம் எப்படிம்மா இருக்கும்?
நீ சாப்பிட்டிருக்கியாம்மா?

சாப்பிட்டிருக்கேன்டா கண்ணா, எப்பவாவது. ரொம்ப நாள் முன்னாடி சாப்பிட்டிருக்கேன்டா கண்ணா.

எனக்கு ஏன்மா தோசையே நீ தரலே? அது எப்படிம்மா இருக்கும்?

இதோ, ஒரு மாமா இட்லை வடை தோசைன்னு சொல்லிண்டு போனாளே, அதுல பெரிசா இருந்ததே அதுவா? வடை எப்படிம்மா இருக்கும்?

பக்கத்தில் இருந்த ரெண்டொரு குடும்பத்தார் அவன் கேட்ட கேள்வியைப் பார்த்து வியந்தார்கள். இந்த ஆளுக்கு நடுவயசு இருக்கும், தோசை, வடை எப்படி இருக்கும்னு கூடத் தெரியலையே?

அவர்கள் கூட வந்திருந்த ஒரு சின்னப் பையன் அங்கிள், நீங்க தோசை சாப்பிடறீங்களா? எங்கம்மா கொண்டு வந்திருக்காங்க?

இவன் அம்மாவைப் பார்த்தான், அம்மாவோ பதில் ஒன்றும் சொல்லாமல் வேறு திசையில் திரும்பிக்கொண்டு முந்தானைத் தலைப்பால் அவனுக்குத் தெரியாமல் கண்ணில் தெதும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

இல்லேடா கண்ணா, பரவாயில்லை, நான் அவனுக்கு ஊருக்குப் போய் தோசை வாங்கித் தர்றேன், நீ சாப்பிடுப்பா என்று அந்தப் பையனிடம் அம்மா சொன்னாள்.

அவனுக்கு ஆத்திரமாகவும் கோபமாகவும் வந்தது. அந்தப் பையன் தான் தரேன்னு சொன்னானே? அம்மா ஏன் வேண்டாம் என்கிறாள் என்று யோசித்துக்கொண்டே இருந்ததில் ரயில் கிளம்பிவிட்டது. இவனும் அம்மா தந்த இட்லியை மட்டும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டான். ரயிலில் மற்றைய பலரும் தூங்கிவிட்டிருந்தனர். (இரவு 10 மணிக்கு மேல் இருக்கும்).

அப்பப்போ நடு இரவில் ரயில் எங்காவது நிற்கும்போதும் கிளம்பும்போதும் இவனுக்கு தூக்கம் கலைந்து பார்ப்பான். அம்மா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஸ்டேஷன்களில் யார் யாரோ முன் மாதிரி வந்தார்கள், சென்றார்கள். ஒரே இருட்டாக இருந்ததால் அவனும் ஒன்றும் புரியாமல் மறுபடியும் தூங்கறமாதிரி கண்ணயர்ந்தான்.

காலையில் 5.30 மணிக்கு ரயில் மாயவரத்தில் நின்றது. அம்மா அவனை எழுப்பி 'ஊர் வந்துடுச்சு, இறங்கணும், எழுந்துக்கோடா?' என்றாள்.

அவன் மெதுவாக எழுந்து அம்மா தந்த ஏதோ ஒரு பையை தூக்கிக்கொண்டு அம்மாவுடன் நடந்தான்.

அவர்கள் வெளியே வந்து ஒரு கை ரிக்சா பிடித்து பஸ் நிலையம் சென்று கிராமத்திற்குச் செல்ல பஸ்ஸில் அமர்ந்தார்கள்.

பஸ்ஸில் அமர்ந்ததும் அவன் கேட்டான். ஐ, அம்மா, நேத்திக்கு பார்த்தோமே அது மாதிரி நெறைய இங்கே இருக்கேம்மா?

ஆமாம்டா, இதுதான் பஸ் ஸ்டாண்ட். எல்லாரும் அவங்க அவங்க ஊருக்குப் போறதுக்கு பஸ் தேடி இங்கதான் வருவா.

பஸ் புறப்பட்டதும் அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டே முன் மாதிரி பார்த்த விஷயங்களையெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தான். பக்கத்தில் வந்தவர்களுக்கெல்லாம் அவன் கேள்வியைப் பார்த்து அம்மாவிடம் 'ஏம்மா, இது உங்க பையனா?' அவன் கேக்கற கேள்வியைப் பார்த்தா அவன் ஸ்கூலுக்கு ஏதும் போனதில்லையா? படிச்சதில்லையா?

வாழை மரம், தென்னை மரம், தோட்டம், வயல் என்று எதையோ பார்த்து இப்படிக் கேக்கறானே?

அம்மா: அவன் படிச்சதில்லைங்க. அவன் வெளியே எங்கயும் வந்ததில்லை. இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு நானே ஒரு ப்ரயாணம்னு ஊருக்குப் போறேன்.

அந்த மனிதர் அப்படியே யோசித்துக்கொண்டே வேறுதிசையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

[அம்மா என்னத்தைச் சொல்வாள்? 

மனதுக்குள் நினைத்துக்கொண்டு கண்ணில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை துடைத்துக்கொள்ளக் கூடத் தோன்றாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தாள்.

"இந்தப் பிள்ளை பிறந்து மூணு வயசு வரைக்கும் நல்லாத்தானே விளையாடிக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் இருந்தான்.

இவனுக்கு இவன் அப்பா மூஞ்சி கூடத் தெரியலையே. அதைப் பார்க்கக் கூடக் கொடுத்து வைக்கலையே? ஒரு ஞாபகமும் இல்லையே இவனுக்கு?

அட ஞாபகம் இல்லேன்னாக் கூட பரவாயில்லையே, அன்னைக்கு அது மாதிரி ஒண்ணு நடக்காம இருந்திருந்தா, இன்னைக்கு இவன் நல்லாப் படிச்சு வேலைக்குப் போய் கல்யாணம் ஆகி பேரப்பிள்ளை கூடப் பார்த்திருப்பேனே?

அந்தப் பாழாய்ப்போன லாரிக்காரன் கொஞ்சம் பார்த்து ஓட்டிண்டு வந்திருக்கக் கூடாதா? இவன் அப்பா ஓட்டிண்டு போன ட்ராக்டர் அந்தக் கிராமத்து நெடுஞ்சாலை சந்திக்கும் வளைவில் கண்மண் தெரியாம வந்த லாரியில் மோதி இவன் அப்பனை நடு ரோட்டிலேயே சாய்ச்சிடுச்சே?

அன்னைக்கின்னு நான் கூடப் போகலை. வீட்டுல முடியாம இவன் தாத்தாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போகணுமேன்னு வீட்டுல இருந்துட்டேன். இவனை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் ட்ராக்டர்ல பண்ணைக்கு வேலைக்குப் போனார். (அவர் பண்ணையில் வேலை பார்க்கும் ட்ரைவர்).

அந்த விபத்துல அப்பனையும் முழுங்கிட்டு தன்னோட ரெண்டு கண்ணையும் தொலைச்சுண்டு அப்பிராணியா குத்துயிரும் குலையுயிருமா இவனை ஆஸ்பத்திரில பார்த்ததைச் சொல்லவா?

டாக்டர் ரெண்டு நாள் கழிச்சு, இவனுக்கு ரெண்டு கண்ணும் பார்வை போயிடுத்து, அதிர்ச்சியில பேச்சும் வரலேன்னு சொன்னபோது இடிந்து விழுந்தவள்தான். ஒருபக்கம் புருஷனையும் தொலைச்சாச்சு, இன்னொரு பக்கம் ஒரே பிள்ளைக்கும் இப்படி ஆயிடுச்சு.

அதுக்கப்பறம், அவளுக்கு மேற்கொண்டு வைத்தியம் பார்க்க என்று வசதியில்லை. சில வருடங்களில் தாத்தாவும் போய்விட்டார்.

அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் வேறு ஊருக்குச் செங்கல்பட்டுப் பக்கத்துல ஒரு சின்ன ஊருக்கு வந்து ஒரு பங்களா வீட்டில் சமையல்காரியாய் வாழ்ந்து பிள்ளையை வளர்த்தாள். நாளாவட்டத்தில் பேச்சு மட்டும் வந்தது. பிள்ளையை பக்கத்து வீட்டில் மீனாவிடம் விட்டுவிட்டுத்தான் வேலைக்கு போவாள்.

பங்களாவில் வேலை செய்தாலும், தன் ஏழ்மை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு அவர்கள் தரும் எதையும் கௌரவம் கருதி சம்பளத்திற்கு மேல் எதற்கும் ஆசைப்படாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு, பிள்ளை உண்டு என்று வாழ்ந்துவிட்டாள்.

அவனைப் படிக்க வைக்கவும் வசதியில்லை. யாரிடம் கேட்பது என்று தோணலை. ஓரிரு பேரிடம் முன்னர் உதவி கேட்டுப் பார்த்தாள். அவர்கள் வேறு விதமாய் தங்கள் எண்ணங்களை இவளிடம் பேச்சில் வித்தியாசமாய் இருக்கவே எல்லாத்தையும் ஒதுக்கிவிட்டாள். அவன் படிக்காமலேயே இருந்துட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

மீனா பிறிவியிலேயே ரெண்டு கால்களும் ஊனம். நடக்க முடியாது. அவள்தான் அவனுக்கு அவ்வப்போது வெளி உலகத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த அளவுக்கு சொல்லித் தருவாள். இவளும் வேலை முடிந்துவந்து இவனுக்கு இரவு உணவு தயாரித்து கஞ்சியோ கூழோ மோர் சாதமோ இட்லியோ செய்து கொடுத்துவிட்டு தூங்கிவிடுவாள்.

இவனுக்கு 35 36 வயசு இருக்கும்போதுதான் மீனா வீட்டுக்கு வெளியூர்லருந்து வந்த ஒரு பெரியவர் இவனைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனக்குத் தெரிந்த ஒரு லயன்ஸ் கிளப் மருத்துவச் சாலையில் வைத்தியம் செய்ய வைத்து, இப்போதுதான் ரெண்டு வருஷமா ஒரு கண் பார்வை மட்டும் வந்திருக்கு. அதுவும் யாரோ ஒரு புண்ணியவான் கண் தானம் தந்ததால் ஒரு கண் பார்வை மட்டும் கிடைத்துள்ளது. ரெண்டாவது கண்ணில் ஏதோ குறையாம், இனிப் பார்வை திரும்ப வாய்ப்பேயில்லை என்று டாக்டர் கைவிரித்துவிட்டார்.

இதையெல்லாம் யாரிடம் சொல்வாள்? அதுவும் பஸ்ஸில் முன் பின் தெரியாத ஒருவரிடம் இத்தனைக் கதைகளையும் சொல்ல அவளுக்குத் தைரியமில்லை.

அவன் பஸ்ஸில் ஜன்னல் சீட்டில் இருந்தபடியே வேடிக்கை பார்த்தபடியே வந்தான்.
(concluded)

No comments:

Post a Comment